Tuesday, May 24, 2011

கவி ராயனும் கொல்லனும்


ஐரோப்பாவில் மஹா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு  கொல்லன் பட்டறை வழியாகப் போய்க்கொண்டிருந்தார்.  அப்போது பாட்டுச்சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக்கொண்டிருந்தான்.

அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுத்ப்பட்டது.  அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தம் தவறியும் மனம் போனபடியெல்லாம் பாடிக்கொண்டிருந்தான்.

கவிராயருக்கு மஹா கோபம் வந்துவிட்டது.  உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்பமுண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன், "நீ யாரடா, பயித்தியம் கொண்டவன்.  என்னுடைய சாமான்களையெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்?" என்றான்.

"உனக்கென்ன?" என்று கேட்டார், கவிராயர்.

"எனக்கென்னவா? என்னுடைய சொத்து, தம்பீ, என்னுடைய ஜீவனம!" என்றான், கொல்லன்.

அதற்கு கவிராயர், "அது போலவேதான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே;  என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய்.  எனக்கு அதுதான் ஜீவனம்.  இனிமேல் நீ சரியாகப் படித்துக்கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே" என்று சொல்லி விட்டு போனார்.

0 comments

Post a Comment